சிலி நாட்டில் காட்டுத்தீயில் 120 வீடுகள் எரிந்து சாம்பல்: நாசவேலை காரணமா?

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 120 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
சிலி நாட்டில் காட்டுத்தீயில் 120 வீடுகள் எரிந்து சாம்பல்: நாசவேலை காரணமா?
Published on

சாண்டியாகோ,

சிலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் வல்பரைசோ. மலைப்பிரதேசமான இந்த நகரம் மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த வல்பரைசோ நகரில் நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது.

பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவியது. கிட்டத்தட்ட 445 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு இந்த காட்டுத்தீயில் எரிந்து நாசமானது.

கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ ரோகுயண்ட் மற்றும் சான்ரோக் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்தது.

இதில் அங்கு காட்டையொட்டி மலைக்கு மேல் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தீப்பற்றியது. இந்த தீயானது சுற்றியுள்ள அத்தனை வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்ட எரிய தொடங்கியது.

இப்படி இந்த காட்டுத்தீயில் சிக்கி சுமார் 120 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்த காட்டுத்தீயில் சிக்கி யாரும் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் இல்லை. அதே சதயம் இந்த காட்டுத்தீயால் வல்பரைசோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. சுமார் 1 லட்சம் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதன் காரணமாக வல்பரைசோ நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்தியும் காட்டுதீயை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக அமையும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இந்த காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் மர்ம ஆசாமிகள் வேண்டுமென்றே தீவைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அந்த நகரின் மேயர் ஜார்ஜ் ஷார்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com