

காத்மாண்டு,
நேபாளத்தில் பேரிடர் நிகழ்ந்து 11 நாட்களுக்குப் பின் பெண் உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அங்கு மாயமான 4,900 பேரை இன்னும் காணாததால் சோகம் நீடிக்கிறது.
இமயமலையில் பனிப்பாறை உடைந்து போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தை உருக்குலைத்தது. கற்கள், சேறு-சகதி என பெரும் பிரளயமாக வெடித்த இந்த பேரிடரில் கிராமங்கள், நகரங்கள், கட்டமைப்புகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட் டன.
ஆற்றின் போக்கில் வசித்து வந்தவர்கள் மற்றும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் அடித்துச்செல்லப்பட்டனர்.
நேபாளத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த துயரம் கடந்த மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட நிலையில், 12-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நேபாள ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இந்த பணிகளில் இந்திய சுரங்க மீட்பு நிபுணர்கள் உள்பட வெளிநாட்டினரும் இணைந்துள்ளனர். இவர்கள் இதுவரை 13 ஆயிரத்துக்கு அதிகமானோரை மீட்டுள்ளனர்.
அதேநேரம் உயிரிழந்தவர்களின் உடல்களும் இடிபாடுகளில் இருந்தும், சேற்றுக்குவியலில் இருந்தும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று வரை 1,375 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
பலியானவர்களில் 85 குழந்தைகளும் அடங்குவர். மேலும் பல்வேறு இடங் களில் இருந்து மீட்கப்பட்ட 501 உடல்கள் சிதைந்தும், பாகங்கள் மாயமாகியும் இருந்தன.
நீண்ட நாட்களாக வெள்ளத்தில் கிடந்ததாலும், அதிக எடை கொண்ட இடிபாடுகளில் சிக்கியிருந்ததாலும் மோசமான நிலையில் இருந்தன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாதபடி சிதைந்திருந்ததால், மரபணு சோதனைக்காக மாதிரிகள் எடுத்துவிட்டு தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி 1,030 உடல்கள் இதுவரை அடக்கம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாயமானவர்களின் முழு உடலுக்குப்பதிலாக கைகள், கால்கள் என ஆங்காங்கே மீட்கப்படும் உடல் பாகங்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றைப்பார்த்து சிலர் தங்கள் உறவுகளை அடையாளம் காண்பதால், மரபண சோதனை பெரும் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த பேரிடரில் சிக்கி மாயமானவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை. இதில் 600-க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் தெரிய வந்துள்ளது.
மாயமானவர்களில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றிருந்த சுமார் 275 இந்தியர்களும் அடங்கியுள்ளதால் இந்தியாவிலும் பெரும் சோகம் நிலவி வருகிறது.
இதற்கிடையே நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு திபெத்திலும் பேரிடரை ஏற்படுத்தியது. இதில் சுமார் 600 பேர் மாயமாகி இருந்த நிலையில், 30-க்கு அதிகமானோர் உயிரிழந்திருப்பதும், 500-க்கு மேற்பட்டோரின் கதி தெரியாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 நாட்களுக்கு மேல் ஆகியும் மாயமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திரிசூலி 3 ஏ நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் 10 நாட்களாக சிக்கியிருந்த 2 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இது மீட்புப்படையினருக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. அதனடிப்படையில் பணிகளை மேலும் முடுக்கி விட்ட அவர்கள், அனைத்து நீர்மின் சுரங்கங்களி லும் முழுவீச்சில் தேடினர்.
இதில் அப்பர் திரிசூலி 1 நீர்மின் திட்ட சுரங்கத்தில் சிக்கியிருந்த லுகை தாவோ என்ற சீன நாட்டவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டார்.
சுரங்க வாயிலில் இருந்து சுமார் 225 மீட்டருக்கு அப்பால் சிக்கியிருந்த அவரை நேபாள ராணுவம் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இணைந்து வெளியே தூக்கி வந்தனர். பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 900-க்கு அதிகமான பணியாளர்கள் மாயமாகி இருக்கும் நிலையில், அவர்களில் சுமார் 500 பேர் இந்த சுரங்கங்களில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே சுரங்கங்களில் தேடும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த 4 மாடி வீட்டின் இடிபாடுகளுக்குள் யாரும் இருக்கிறார்களா? என மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சுமார் 60 வயது பெண் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையே மயங்கிக்கிடந்தார். உடனே அவரை மீட்ட மீட்புக்குழுவினர், அவரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இவ்வாறு தொடர்ந்து உடல்களை மட்டுமே மீட்டு வரும் மீட்புக்குழுவினருக்கு ஆங்காங்கே இப்படி உயிருடன் ஓரிருவர் கிடைப்பது நம்பிக்கையை துளிர்க்க செய்து இருக்கிறது.