

போகோடா,
கொலம்பியாவின் அமேசான் பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு டிசி-3 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 9 பயணிகளும், 2 விமானிகளும், விமான ஊழியர் 3 பேரும் இருந்தனர்.
மேடா மாகாணத்தில் உள்ள லா பெண்டிரிசோன் நகருக்கு அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.