ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள்; கருணை கொலை செய்ய முடிவு


ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள்; கருணை கொலை செய்ய முடிவு
x
தினத்தந்தி 19 Feb 2025 7:11 PM IST (Updated: 19 Feb 2025 7:12 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவின் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களில் 90 திமிங்கலங்களே இன்று உயிருடன் உள்ளன.

தாஸ்மானியா,

ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணங்களில் ஒன்றான தாஸ்மானியாவின் வடமேற்கு கடற்கரையோர பகுதியில், 150-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று மதியம் கரையொதுங்கின. இதனை தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று அவற்றை கடலுக்குள் மீண்டும் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், வானிலை மோசமடைந்த நிலையில் அவற்றை கடலில் விடும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இதே வானிலை நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அவற்றில் 90 திமிங்கலங்களே இன்று உயிருடன் உள்ளன என தெரிகிறது.

உருவத்தில் திமிங்கலங்களை போன்று காணப்பட்டாலும், இவை டால்பின் குடும்பத்தில் வருபவை. 3 ஆயிரம் கிலோ எடையுடன், பொதுவாக கடற்கரையில் இருந்து சற்று உள்ளடங்கிய பகுதியில், கடலின் ஆழத்தில் வசிப்பவை. இந்த திமிங்கலங்கள் கடற்கரைக்கு வந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இவற்றை காப்பாற்ற முடியாத மற்றும் கடலுக்குள் திருப்பி விட முடியாத சூழலில், கடைசியாக அவற்றை கருணை கொலை செய்யும் முடிவு எடுக்கப்படும்.

பொதுவாக தாஸ்மானியா பகுதியில், பைலட் வகை திமிங்கலங்கள் இதுபோன்று அதிக அளவில் கடந்த காலங்களில் கரையொதுங்கின. இந்நிலையில், 1974-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இவ்வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

தாஸ்மானியாவின் மேற்கு கடலோரம் மேக்குவாரி ஹார்பர் பகுதியில், கடந்த 2022-ம் ஆண்டு 200 முதல் 230 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவை பின்னர் உயிரிழந்தன. இதே பகுதியில், 2020-ம் ஆண்டு 470 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அப்போது, 100-க்கும் குறைவான திமிங்கலங்களே காப்பாற்றப்பட்டன.

1 More update

Next Story