

புதுடெல்லி
இந்தியாவில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெறும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. “வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளில் தலைமைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய 3 முக்கியத் தூண்களின் அடிப்படையில் பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்பு, பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி நிலவரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்களில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா, ஏற்கனவே 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. தற்போது 4-வது முறையாக 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளர் நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 400 பேர் கொண்ட குழுவுடன் டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதாக ஏற்கனவே செய்தி ஒன்று வந்தது. எனினும் பயணம் குறித்து உறுதி செய்யப்படவில்லை. ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டிற்கு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரஷிய தரப்பில் இருந்து இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை, இந்தியா விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர் பங்கேற்பது உறுதியாகவில்லை.