

பிரேசிலியா,
பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா. இந்தத் தம்பதியினர் இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் (அரை நிமிடம்) 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது. இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இருவரும் "உலகின் மிகச்சிறந்த தம்பதி" என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.