

குய்டோ,
ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ மலையின் உச்சியில் 6,277 மீட்டர் உயரத்தில் செஸ் விளையாடி அமெரிக்காவைச் சேர்ந்த 2 நண்பர்கள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த செஸ் விளையட்டு வீரர்கள் மற்றும் நண்பர்கள் ஆடம் வினிங்கர் மற்றும் ஜோஷுவா ஹோஸ்ட். இவர்கள் ஈக்வடார் நாட்டின் பொலிவர் மாகாணத்தில் அமைந்துள்ள சிம்போராசோ தேசியப் பூங்காவின் விம்பர் சிகரத்தில், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி அன்று செஸ் விளையாட்டை விளையாடினர்.
கடல் மட்டத்திலிருந்து 6,277 மீட்டர் (20,593 அடி) உயரத்தில் இந்த ஆட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம், "நிலத்தில் மிக உயரமான இடத்தில் போர்டு கேம் (பலகை விளையாட்டு) விளையாடியது" என்ற பிரிவில் இவர்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு நேபாளத்தின் புதா ஹியுஞ்சுலி மலையில் 20,393 அடி உயரத்தில் படைக்கப்பட்ட முந்தைய சாதனையை, இவர்கள் 200 அடி வித்தியாசத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
பூமியின் மையப்பகுதியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள புள்ளியாக சிம்போராசோ மலை கருதப்படுகிறது. இங்கு நிலவும் கடுங்குளிர் மற்றும் குறைந்த அளவு ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கு இடையே இவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக இவர்களின் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், விடாமுயற்சியுடன் 2-வது முறையாக மலை ஏறி வெற்றிகரமாகத் தங்கள் இலக்கை எட்டியுள்ளனர்.