

மக்காசர்,
இந்தோனேஷியாவில் தெற்சு சுலவேசி மாகாணத்தில் மக்காசர் பகுதியில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிலையில், காலை 10.30 மணியளவில் முதல் பிரார்த்தனை கூட்டம் முடிந்து தேவாலயத்தில் இருந்தவர்கள் வெளியே வந்தனர்.
மேலும், 2வது பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக பலர் ஆலயத்துக்குள் வந்தனர். அப்போது, நுழைவு வாயிலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உள்ளே நுழைய முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த தேவாலய ஊழியர்கள் அவர்களை நுழைவாயிலிலேயே நிறுத்தி விசாரித்தனர்.அப்போது இருவரும் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இருவரும் உடல் சிதறினர். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. தேவாலயத்திற்குள் இருந்த அனைவரும் கடுமையாக பீதியடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாகுதலில் தேவாலய ஊழியர்கள் உள்பட 20 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.