துனிசியா கடலோரம் ஒதுங்கிய 20 உடல்கள் மீட்பு

துனிசியாவின் வடகிழக்கே கடற்கரையோரம் ஒதுங்கிய 20 உடல்களை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

துனிஸ்,

துனிசியா நாட்டின் வடகிழக்கே நேபியுல் கடற்கரையோரம் பாதுகாப்பு வீரர்கள் சில உடல்களை கண்டெடுத்து உள்ளனர். அந்த உடல்களை சோதனை செய்து பார்த்தபோது, சிரிய நாட்டின் பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளன.

போரால் பாதிக்கப்பட்டு உள்ள சிரியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். இதற்கு கடல் வழியை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக தங்களது குடும்பத்தினருடன் மத்திய தரைக்கடல் பகுதி வழியே படகுகளில் சட்டவிரோத வகையில் தப்பி செல்கின்றனர். இதற்கு துனிசியா நாட்டையும் பயன்படுத்தி கொள்கின்றனர். எனினும், அதிக எண்ணிக்கை, சுமை மற்றும் பெரிய அலைகள் இவற்றால் படகுகள் நீரில் மூழ்கி விடும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், துனிசியா நாட்டின் வானொலி நிலையம் ஷெம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நேபியுல் கடலோர பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை மொத்தம் 20 உடல்களை மீட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. தொடர்ந்து காணாமல் போன அகதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அதனுடன், உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com