

டெஹ்ரான்,
வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன. இதனால் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டு உள்ளன.
இந்தபோரில் தங்கள் உச்சபட்ச தலைவரை முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் பறிகொடுத்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக ஈரானின் கடற்படைகள், விமானப்படைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இப்படி வெற்றிக்களிப்பில் அமெரிக்கா இருந்து கொண்டிருக்கும்போது தான் ஈரான் தனது அடுத்த ஆயுதத்தை இறக்கி விட்டது. அதாவது 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் ஏவுகணையை யாரும் எதிர்பாராத வகையில் களத்தில் இறக்கி அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதன்படி இந்தியப்பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவான டியாகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளுக்கு சொந்தமான படைத்தளத்தை நோக்கி 2 ஏவுகணைகளை நேற்று வீசியது.
ஈரான் வீசிய இந்த நீண்ட தூர ஏவுகணை 'கொரம்சாகர்-4' வகையை சார்ந்தது ஆகும். நேற்று வீசப்பட்ட 2 ஏவுகணைகளிலும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்த தாக்குதல் முயற்சியே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பிற நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அவை கூறியுள்ளன.
இதன்படி ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, டென்மார்க், லாட்வியா, சுலோவீனியா, எஸ்டோனியா, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக் குடியரசு, ருமேனியா, பஹ்ரைன், லிதுவேனியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, தாக்குதல்களை நிறுத்தக் கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், “வளைகுடாவில் ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும், ஈரானியப் படைகளால் ஹோர்முஸ் ஜலசந்தி நடைமுறையில் மூடப்பட்டிருப்பதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,
தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஜலசந்தியைத் தடுக்கும் தனது அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை புதைத்தல், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2817-க்கு இணங்குமாறும் ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.