3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்; 42 இந்திய பணியாளர்கள் உயிர் தப்பினர்

மேற்காசியாவில் நடந்து வரும் மோதலில் இதுவரை 9 ஊழியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
கப்பல்
Published on

தெஹ்ரான்

இந்திய பணியாளர்களுடன், வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 கப்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான ரீஸ்கோ, பலாவ் கொடியுடன் கூடிய சமையல் எரிவாயு கப்பல் ஹாரிசான் 1 மற்றும் லைபீரிய கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான மெர்சின் பிராஸ்பெரிட்டி ஆகியவை அடங்கும்.

அமெரிக்க கடற்படை தாக்குதல்

இதில் முதலில் கடந்த 8-ந்தேதி இரவில், ஓமன் வளைகுடா பகுதியில் வைத்து ரீஸ்கோ கப்பல் தாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலில், 21 இந்திய ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கப்பலை விட்டு வெளியேறி ஈரான் துறைமுகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதே 8-ந்தேதி இரவு 11.30 மணியளவில் ஹாரிசான் 1 கப்பல் தாக்கப்பட்டது. அந்த கப்பலில் 14 இந்தியர்கள் மற்றும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 16 ஊழியர்கள் இருந்துள்ளனர். அருகேயிருந்த மற்றொரு கப்பலின் உதவியுடன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

42 இந்திய ஊழியர்கள்

அதற்கு அடுத்த நாள் மெர்சின் பிராஸ்பெரிட்டி கப்பலை, புஜைரா பகுதியருகே ஏவுகணை ஒன்று தாக்கியது. அதில், 7 இந்திய பணியாளர்கள் இருந்துள்ளனர். எனினும், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதனால், மொத்தம் 3 கப்பல்களில் இருந்த 42 இந்திய ஊழியர்கள் கடுமையான தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.

மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் மீது 4 முறையும் மற்றும் இந்திய பணியாளர்களுடன், வெளிநாட்டு கொடிகளை கொண்ட கப்பல்களின் மீது 50 முறையும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இவற்றில், 9 ஊழியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்து இருக்க கூடும் என தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com