ரஷியாவில் உக்ரைன் எல்லை அருகே தொடர் குண்டு வெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் உக்ரைன் எல்லை அருகே தொடர் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 4 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைன் வீரர்கள் ரஷிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷியா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகரில் நேற்று அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சுமார் 4 லட்சம் மக்கள் வாழும் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 11 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 39 வீடுகள் பலத்த சேதம் அடைந்ததாகவும், அவற்றில் 5 கட்டிடங்கள் முற்றிலுமாக தரை மட்டமானதாகவும் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.

மேலும் இந்த தொடர் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே ரஷியாவின் மூத்த எம்.பி. ஒருவர் பெல்கோரோட் நகரில் உக்ரைன் படைகள் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். எனினும் உக்ரைன் தரப்பு இது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com