

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 13 லட்சத்து 52 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்குள்ளும் கொரோனா வைரஸ் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவருக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் 3 உறுப்பினர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் டாக்டர் அந்தோணி பாசி, டாக்டர் ராபர்ட் ரெட்பீல்டு, ஸ்டீபன் ஹான் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் பெயர் வெளியிடப்படாத கொரோனா தொற்று கொண்ட ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இவர்களில் அந்தோணி பாசி, அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய பணியாற்றி வருபவர் ஆவார். 79 வயதான இவர் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் இன்ஸ்டிடியூட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
டாக்டர் ராபர்ட் ரெட்பீல்ட், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ஆவார்.
ஸ்டீபன் ஹான், அமெரிக்காவின் புகழ் பெற்ற எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கமிஷனர் ஆவார்.
இதையொட்டி டாக்டர் அந்தோணி பாசியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் அந்தோணி பாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. அவர் தொடர்ந்து தன்னை பரிசோதனைக்கு உட்படுத்துவார். ஒப்பீட்டளவில் அவர் குறைந்த ஆபத்தில் இருப்பவராக கருதப்படுகிறார். தனது கடமைகளை செய்யும்போது, தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ஏற்படுகிற ஆபத்தை தணிப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
68 வயதான ரெட்பீல்டுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் வெள்ளை மாளிகையில் குறைவான ஆபத்து உள்ள ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் அடுத்த 2 வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தொலை தொடர்பு சாதனங்கள் வழியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதான ஸ்டீபன் ஹானுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துள்ளது. ஆனாலும் தொற்று உடையவருடன் தொடர்பில் இருந்ததால் அவர் 2 வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்திக்கொண்டுள்ள 3 பேரும் நாளை (செவ்வாய்க்கிழமை), நாடாளுமன்ற செனட் கமிட்டி முன் காணொலி காட்சி வழியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர்கள் 3 பேர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருப்பது அங்கு பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.