300 ஆண்டுகால பருவநிலை வரலாறு... ஆர்க்டிக் பனிப்பாறைகளை பிரித்து எடுத்த விஞ்ஞானிகள் குழு

உலகளாவிய சராசரியை விட 2 முதல் 4 மடங்கு வரை ஆர்க்டிக் பனிப்பகுதி வெப்பமடைந்து உள்ளது என்று ஆய்வுகள் சுட்டி காட்டி உள்ளன.
300 ஆண்டுகால பருவநிலை வரலாறு... ஆர்க்டிக் பனிப்பாறைகளை பிரித்து எடுத்த விஞ்ஞானிகள் குழு
Published on

வாஷிங்டன்,

உலகில் பருவநிலை மாற்றங்களால் இன்றைய காலகட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கடல் நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகுதல், வெப்பநிலை அதிகரிப்பு, வெப்ப அலை, காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மனித சமூகம் எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இருந்து மீண்டு வர இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூட, பருவநிலை மாற்றம் என்பது இதுபோன்ற உச்சி மாநாடுகளில் நாம் பேசுவதன் வழியே தீர்வு காண முடியாது என்றும் ஒவ்வொரு வீட்டின் இரவு நேர உணவு உண்ணும்போது மக்களாகிய நாம் அதுபற்றி உணர்ந்து, விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலாக கூறினார்.

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகள் பருவநிலை மாற்றங்களில் இருந்து மீள, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டு, அந்த அளவிலேயே உள்ளது. இந்த நிலையில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிக்கட்டி மாதிரிகளை விஞ்ஞானிகள் குழு ஒன்று கடுமையாக போராடி மீட்டு, வெற்றி பெற்று உள்ளது.

இதற்காக பிரான்ஸ், இத்தாலி மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 8 ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று நார்வே நாட்டின் ஸ்வால்பார்டு பகுதிக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முகாமிட்டனர். கடுமையான புயல் வீசியபோதும், அதிக குளிர் போன்ற பல தடைகளை கடந்து, கடந்த காலங்களில் பூமியின் பருவநிலை எப்படி இருந்தது? என்பது பற்றி அறிவதற்கும் மற்றும் அதன் மீது மனித செயல்களால் தற்போது ஏற்பட்டு உள்ள பேரழிவுக்கான தாக்கம் பற்றியும் அறிந்து கொள்வதற்கான முக்கியம் வாய்ந்த பனிக்கட்டி பதிவுகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஐஸ் மெமரி அறக்கட்டளை சார்பில் சென்ற அந்த குழுவினர் 3 பெரிய பனிப்பாறைகளை பிரித்து எடுத்து வந்து உள்ளனர். இந்த முயற்சியில் கடுமையான போராட்டங்களை அவர்கள் சந்தித்து உள்ளனர். மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும் என எதிர்பார்த்து கடந்த மார்ச்சில், ஹோல்டெடால்போன்னா பகுதியில் இந்த குழு கூடாரம் ஒன்றை அமைத்து தங்கியது.

ஆனால், பலத்த காற்று வீசியதில், வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் ஆனது. இதனால், பனிக்கட்டிகளை தோண்டி எடுக்க பல நாட்கள் ஆனது. அதன்பின்பு, 80 அடி நீள பனிப்பாறை ஒன்றை தோண்டி எடுத்தனர். உடனே, அந்த ஓட்டைக்குள் உருகிய நீர் உட்புகுந்து உள்ளது.

எனினும், 50 முதல் 75 மீட்டர்கள் நீளமுள்ள 3 பனிப்பாறைகளை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்து அதில், வெற்றி அடைந்து உள்ளனர். அவற்றில் 300 ஆண்டுகால பருவநிலை வரலாறு பற்றிய விவரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை வருங்கால அறிவியல் ஆராய்ச்சிக்காக அன்டார்டிகாவில் உள்ள ஆய்வு நிலையத்தில் வைத்து பாதுகாக்க உள்ளனர்.

இதுபோன்ற மிக ஆழத்தில் உள்ள பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் உள்ள ரசாயன பொருட்களை ஆய்வு செய்யும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியின் பருவநிலை மற்றும் சுற்றுச்சுழல் நிலை ஆகியவை பற்றிய தரவுகளை அறிந்து கொள்ள முடியும். உண்மையான பனிப்பாறைகள் மறைந்த பின்னர் கூட அவற்றை பற்றி நாம் அறிய உதவும். இந்த பனிப்பாறைகள் நாளடைவில் அதன் நிறையை இழப்பது மட்டுமின்றி, குளிர் தன்மையையும் இழக்கிறது.

கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்கிய தொழில்மயம் ஆக்கல் செயல்களால், புதைபொருள் படிவங்களை கொண்டு நடந்து வரும் நடவடிக்கைகளால், மனித விளைவுகளால் ஏற்பட்ட கார்பன் வெளிப்பாடுகளால் புவியின் வெப்பநிலை 1.15 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளது. உலகளாவிய சராசரியை விட 2 முதல் 4 மடங்கு வரை ஆர்க்டிக் பனிப்பகுதி வெப்பமடைந்து உள்ளது என்று ஆய்வுகள் சுட்டி காட்டி உள்ளன.

உலகளாவிய முறையில் வெப்பநிலை உயரும்போது, உருகும் நீரானது, கசிந்து இந்த பழமையான பனிப்பகுதிக்குள் செல்லும்போது, புவிரசாயனம் சார்ந்த பதிவுகளை அழிக்க கூடிய ஆபத்து உள்ளது. அதனால், விஞ்ஞானிகளால், தேவையான தரவுகளை பெறுவதற்கு முன்னரே அவை அழிந்து போக கூடிய சூழலும் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஐஸ் மெமரி குழுவை சேர்ந்த இயக்குநர், துணை தலைவர் உள்ளிட்டோர் மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச அளவில் வேண்டுகோள் ஒன்றை விடுத்து உள்ளனர்.

இதன்படி அவர்கள் கூறும்போது, நமக்கு அவை வேண்டும். அழிந்து வரும் நிலையிலுள்ள பெரிய பனிப்பாறைகளில் இருந்து விரைவாக நாம் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். அல்லது அவற்றை பாதுகாக்க வேண்டும். இதற்கு முன் சேகரிக்கப்பட்ட பனிப்பாறை மையங்கள், விலை மதிப்பில்லா தகவல் கொண்ட அவற்றை, அன்டார்டிகாவில் நாங்கள் மிக பாதுகாப்புடன் வைத்திருக்கிறோம்.

இதுபோன்ற தகவல் தொகுப்புகளை நாம் இழந்து விட்டால், பருவநிலையில் மனிதர்களின் மாற்றங்கள் பற்றிய நினைவுகளை நாம் இழந்து விடுவோம். சமூகத்தின் நலனுக்கான முடிவுகளை எடுக்க கூடிய வருங்கால விஞ்ஞானிகள் மற்றும் முக்கிய அரசியல் கொள்கைகளை வகுக்க கூடிய அரசியல்வாதிகளுக்கான முக்கியம் வாய்ந்த தகவல்களையும் நாம் இழக்க நேரிடும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com