பிரான்ஸ் காட்டுத்தீக்கு 3,250 ஏக்கர் நிலங்கள் சேதம்; 2 பேர் கைது

இதுதவிர, பிரான்ஸ் முழுவதிலும் இருந்து 59 பேர் கைது செய்யப்பட்டனர் என நுனெஜ் கூறியுள்ளார்.
பிரான்ஸ் காட்டுத்தீக்கு 3,250 ஏக்கர் நிலங்கள் சேதம்; 2 பேர் கைது
Published on

பாரீஸ்

பிரான்ஸ் நாட்டில் காட்டுத்தீ பரவியதில் 3,250 ஏக்கர் பரப்பளவிலான நிலம் சேதமடைந்து உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே பவுன்டைன்புளூ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவியது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் ரெயில் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், சிறப்பு விமானங்களும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

3 ஆயிரம் ஏக்கர்

இதுபற்றி பிரான்ஸ் உள்நாட்டு மந்திரி லாரென்ட் நுனெஜ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஏறக்குறைய 1,200 ஹெக்டேர் (3 ஆயிரம் ஏக்கர்கள்) வனப்பகுதியானது நேற்று மதியம் வரை காட்டுத்தீ பரவியதில் அழிந்து விட்டது.

இதில், நேற்று மதியத்திற்கு பின்பு, 2-வது காட்டுத்தீ பரவியதில் 100 ஹெக்டேர் பகுதி அழிந்து விட்டது. ஆயிரம் பேர் வரை தப்பி வேறு இடங்களுக்கு சென்று விட்டனர் என்றார். நேற்று மாலை வரை மொத்தம் 187 முறை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உதவியுடன் நீர் தெளிப்பான்களுடன் சென்று தீயை அணைக்கும் பணி நடந்தது.

தீயணைப்பு வீரர்கள்

இரவு வரையில் 600 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தரையில் இருந்தபடி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில், உள்நோக்கத்துடனோ அல்லது தற்செயலாகவோ காட்டுத்தீயை பரவ செய்த குற்றத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, பிரான்ஸ் முழுவதிலும் இருந்து 59 பேர் கைது செய்யப்பட்டனர் என நுனெஜ் கூறியுள்ளார். உள்நோக்கத்துடன் காட்டுத்தீ பற்ற வைக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com