

புகாரெஸ்ட்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவில் இருந்து இன்று பேசும்போது, ருமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு 8 விமானங்கள் இன்று செல்கின்றன. அவை 1,800 இந்தியர்களை மீட்டு திரும்புகின்றன. நேற்று புகாரெஸ்டில் இருந்து 6 விமானங்களில் 1,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். சைரத் எல்லை பகுதிக்கு நான் சென்று கொண்டிருக்கிறேன். அந்த பகுதியில், ஆயிரம் மாணவர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.
சைரத்துக்கு அருகேயுள்ள விமான நிலையம் சுசீவா. இன்று 2 இன்டிகோ விமானங்களும், நாளை 4 விமானங்களும் சுசீவாவுக்கு வந்து முறையே 450 மற்றும் 1,000 மாணவர்களை மீட்டு செல்லும் என கூறியுள்ளார்.
இதேபோன்று டுவிட்டரில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், புகாரெஸ்டில் இருந்து 8 விமானங்களிலும், சுசீவாவில் இருந்து 2 விமானங்களிலும், கொசைஸில் இருந்து ஒரு விமானத்திலும், புடாபெஸ்டில் இருந்து 5 விமானங்களிலும் மற்றும் ஜிரெஸ்ஜவ்வில் இருந்து 3 விமானங்களிலும் என 3,726 இந்தியர்கள் இன்று நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.