தென்கொரியாவின் ஜெஜூ தீவில் 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்பு; அதிர்ச்சியில் மக்கள்

போலி தகவல் அளித்த போலீஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ’பு’ கைது
Published on

சியோல்,

பிரபல சுற்றுலாத் தலமான ஜெஜூ தீவில், 3 நாட்களில் 4 சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 சடலங்கள் மீட்பு

தென்கொரியாவின் ஜெஜூ தீவில் கடந்த மே மாதம் ஜாங் மி-ரான் (வயது 37) என்ற பெண் காணாமல் போனார். 100 நாட்களுக்கு பிறகு, சமீபத்தில் அவரது உடல், அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள பனை மர பண்ணையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் கட்டுமானப் பகுதியிலும், 70 வயது மதிக்கத்தக்க மற்றொரு முதியவரின் உடல் கடற்கரைப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு உடலும் மீட்கப்பட்டது. இந்த 4-வது சடலம் தொடர்பான வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜெஜூ தீவில் ஏற்கனவே பலர் காணாமல் போன நிலையில், சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் தொடர் கொலையாளி செயல்படுகிறாரா அல்லது கடத்தல் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா? என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.

போலீசாரின் அலட்சியம்

மீட்கப்பட்ட 4 சடலங்களில் 2 பேர் காணாமல் போனபோதே அவர்களது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த வழக்குகளை விசாரித்த ‘பு’ என்ற போலீஸ் அதிகாரி உரிய முறையில் விசாரணை செய்யாமல் வழக்குகளை முடித்து வைத்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஜெஜூ தீவில் காணாமல் போனவர்களை கண்டுப்பிடிப்பதற்காக அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தபோது அந்த அதிகாரி விசாரணை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, காணாமல் போனவர்களை தொடர்புகொண்டதாகவும், அவர்கள் தங்களது இருப்பிடத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியதாகவும் அந்த அதிகாரி, புகார் அளித்த குடும்பத்தினரிடம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் மிகவும் கவனத்தை ஈர்த்த வழக்கு ஜாங் மி-ரான் காணாமல் போன வழக்கு. அந்த அதிகாரி, அவரைத் தொடர்புகொள்ளாமலேயே ஒரே நாளில் வழக்கை முடித்துவைத்திருக்கிறார்.

ஒன்றல்ல, இரண்டல்ல.. இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான சுமார் 298 வழக்குகளை அவர் தனியொருவராக கையாண்டு, உறவினர்களிடம் போலியான தகவல்களை கூறி, வழக்கை முடித்து வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்குகள் தொடர்பான தரவுகளை கணினியில் இருந்து நீக்கியதும் தெரியவந்தது.

4 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்

இந்த முறைகேடு தொடர்பாக ஜெஜூ தீவு மேற்கு காவல் நிலையத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகளை தென்கொரிய தேசிய காவல் முகமை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஜெஜூ தீவில் அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துக்கும், போலீசாரின் முறைகேடு மற்றும் அலட்சியத்துக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியோங் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com