அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

19 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
Published on

சண்டோ டொமினிகா

கரீபியன் தீவு கூட்டத்தொடரில் அமைந்துள்ள நாடு டொமினிக்கன் குடியரசு. இந்நாடு மற்றும் அண்டை நாடான ஹைதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி அகதிகளாக அமெரிக்காவிற்கு ஆபத்தான கடற்பயணம் மேற்கொள்கின்றனர். இதில், விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், டொமினிக்கன் குடியரசு, ஹைதி நாடுகளை சேர்ந்த 40 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அகதிகளாக நுழைய நினைத்துள்ளனர். இதற்காக நேற்று படகு மூலம் டொமினிக்கன் குடியரசில் இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ தீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

டொமினிக்கன் குடியரசு கடற்பகுதியில் சென்றபோது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த டொமினிக்கன் குடியரசு கடற்படையினர் கடலில் மூழ்கிய 17 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 4 அகதிகள் உயிரிழந்தனர். எஞ்சிய 19 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com