காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றம்: வெள்ளை மாளிகை

ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றம்: வெள்ளை மாளிகை
Published on

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நீண்ட கால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.

இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டு வருகின்றன.

காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ள சூழலில், வருகிற 31ந்தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்ப பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்

இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ளனர். இதற்கிடையில், காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் இரவு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். மற்ற 60 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறியுள்ளார். அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், வருகிற 30ந்தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து கடந்த 14ந்தேதியில் இருந்து 1,09,200 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

காபூலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. காபூல் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது. 150 பேர் காயமடைந்து உள்ளனர்.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே 5,400 பேர் விமானங்களுக்காக காத்திருக்கின்றனர் என அமெரிக்க மேஜர் ஜெனரல் வில்லியம் ஹேங் டெய்லர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com