விளையாடி கொண்டிருந்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
விளையாடி கொண்டிருந்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில், மன்கவுஸ் டிரைவ் என்ற ஓட்டலின் அறை ஒன்றில், மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து உள்ளது. உடனடியாக சிறுமியை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், 3 நாட்கள் சிகிச்சையில் பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார்.

இந்த வழக்கில் 35 வயதுடைய ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கு உள்ள தொடர்பு விசாரணையில் தெரிய வந்து உள்ளது. விமல் மற்றும் ஸ்னேகா பட்டேல் என்ற தம்பதி மோட்டல் ஒன்றை நடத்தி வந்து உள்ளனர். அவர்கள் தரை தளத்தில் மகள் மியா மற்றும் அவரது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர்.

அந்த மோட்டலின் வாகன நிறுத்தும் இடத்தில் ஸ்மித் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு உள்ளார்.  ஆனால், அது அந்த நபருக்கு பதிலாக பட்டேல் தம்பதியின் மகளான சிறுமி மியாவை தாக்கி உள்ளது.

இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி ஜான் டி மோஸ்லி, மியா பட்டேலை கொலை செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகள், நீதியை முடக்கியதற்காக 20 ஆண்டுகள் மற்றும் பட்டேலை சுட்டு கொன்றதுடன் தொடர்புடைய தனியான குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டவரான ஸ்மித் அடுத்தடுத்து இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனை காலத்தில் ஸ்மித் பரோலில் வரவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது.

சிறையில் அவரது நல்ல செயல்களுக்காக முன்பே விடுவிக்கும் சலுகை உள்ளிட்ட வேறு எந்த பலன்களையும் ஸ்மித் பெற முடியாது என்றும் முழு தண்டனை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com