இரவுநேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 51 பேர் பலி

இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
இரவுநேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 51 பேர் பலி
Published on

ஸ்கோப்ஜி,

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு வட மாசிடோனியா. இந்நாட்டின் கோகனி நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது.

அந்த விடுதியில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உள்ளூர் இசைக்குழுவை சேர்ந்தவர்கள் இசைநிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இசைநிகழ்ச்சியின்போது நள்ளிரவு 2 மணியளவில் சிலர் மேடையில் பட்டாசுகளை வெடித்தும், வாணவேடிக்கை நடத்தியும் கொண்டாடினர்.

வாணவேடிக்கையின்போது கேளிக்கை விடுதியின் மேற்கூரையில் தீப்பற்றியது. தீ மளமளவென விடுதியின் அனைத்து பகுதியிலும் பரவியது. இதனால், கேளிக்கை விடுதிக்குள் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேற முயன்றனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 51 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com