

பகோட்டா,
கொலம்பியா நாட்டில் வடமேற்கில் உள்ள ஆண்டியோகுயா மாகாணத்தில், நேற்று முன்தினம் இரவில் ஒரு லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள கிராமப்புறத்தில் அவர்களது லாரி சென்றபோது, சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியதாக தெரிகிறது. அப்போது குண்டு வெடித்து லாரி உருக்குலைந்து போனது.
இந்த குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலின் பின்னணியில், வளைகுடா கிரிமினல் கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கும்பலின் தலைவன் என அறியப்படுகிற ஒட்டோனியல் 10 வருட கால தேடுதல் வேட்டைக்கு பின்னர், கடந்த அக்டோபர் மாதம் தான் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலை நடத்தியவர்களை தேடும் பணியை, கொலம்பியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் சாலையோர குண்டுவெடிப்பில் போலீஸ் மேயரும், அவரது டிரைவரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.