

காபூல்,
அமெரிக்காவுடன் தலீபான்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, சமரச ஒப்பந்தம் செய்து கொண்டபோதிலும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நிறுத்த வில்லை.
இந்த நிலையில் அங்கு தகார் மாகாணத்தில், அதன் தலைநகரான தாலுகான் புறநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் வைப்பதற்காக சக்திவாய்ந்த ஐ.இ.டி. வெடிகுண்டு ஒன்றை நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணிக்கு எடுத்துச்சென்றனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வெடிகுண்டு வழியிலேயே பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது.
அந்த குண்டை வெடிக்கச்செய்து மற்றவர்களை கொன்று குவிக்க நினைத்த தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர், இந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி பலியானார்கள். பொதுமக்களில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு குவிந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை, சாலையோரங்களில் புதைக்க தலீபான் பயங்கரவாதிகள் எடுத்துச்செல்கிறபோது, பல நேரங்களில் அவை வழியிலேயே வெடித்து விடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இந்த ஐ.இ.டி. வெடிகுண்டுகள் வெடித்து, அப்பாவி மக்கள் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,330 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.