நேபாளத்தில் 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று 11-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன.
நேபாளத்தில் 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
Published on

காத்மாண்டு,

இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன. நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று 11-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. இதில் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்தது.

காணாமல்போன 4,898 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் காணமுடியாத 1,030 உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம் பெட்ராவதியில் நான்கு மாடி கொண்ட வீட்டின் மேல் தளத்தில் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சேறு, சகதியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆயுதப் படைப் பிரிவினர் மீட்டு அவருக்குத் தண்ணீர் கொடுத்தனர்.

மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com