

வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், வழக்கத்திற்கு மாறாக சுமார் 62 கிலோ (137 பவுண்ட்) எடையுடன் சாலையோரத்தில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்றை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டுள்ளனர்.
அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸின் பவுல்டர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், 8 வயதுடைய பிட்புல் வகை நாய் ஒன்று மிகவும் சோர்வான நிலையில் படுத்திருந்தது. தகவலறிந்து சென்ற 'தி அனிமல் பவுண்டேஷன்' அமைப்பினர், அந்த நாயைத் தெருநாயாகப் பதிவு செய்து மீட்டனர். அதற்கு 'கிங்' என பெயரிடப்பட்டுள்ளது.
பொதுவாகத் தெருநாய்கள் உரிய உணவு கிடைக்காமல் மெலிந்த நிலையிலேயே காணப்படும். ஆனால், 'கிங்' நாயைப் பரிசோதித்த மீட்பாளர்கள் அதன் எடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு சாதாரண வளர்ந்த பிட்புல் நாயின் எடை 23 முதல் 27 கிலோ (50-60 பவுண்ட்) வரை மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தெருநாய் தனது இயல்பான எடையை விட 2 மடங்கு அதிகமாக, அதாவது 62 கிலோ (137 பவுண்ட்) எடையுடன் காணப்பட்டது.
இந்த நாயின் அதீத எடை குறித்துப் பேசிய 'ஹார்ட்ஸ் அலைவ் வில்லேஜ்' தன்னார்வலர் அமைப்பின் பிரதிநிதி ஆஷ்லே நாட்டிங்ஹாம், "கிங் நாய்க்கு ஹைப்போ தைராய்டிசம் எனப்படும் தைராய்டு சுரப்பி குறைபாடு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படாத இந்த குறைபாடும், இதற்கு முன்பு இதனை வளர்த்தவர்கள் அளவுக்கு அதிகமாக உணவளித்திருக்கலாம் என்பதும் இந்த அபாயகரமான எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர் ஒருவரின் பராமரிப்பில் விடப்பட்டுள்ள 'கிங்', உடல் எடையைக் குறைத்து மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதற்கான சிறப்பு சிகிச்சைகளைப் பெற்று வருகிறது. இந்த நாயை அன்புடன் தத்தெடுத்துப் பராமரிக்கும் புதிய குடும்பத்தைத் தேடும் பணியில் விலங்கு நல ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.