துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு - மக்கள் அதிர்ச்சி

துருக்கி, சிரியாவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு - மக்கள் அதிர்ச்சி
Published on

அங்காரா,

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.

இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

இதனிடையே துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,642 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, ஹடாய் மாகாணத்திற்கு அருகிலுள்ள துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8:04 மணிக்கு (17:04 GMT) டிபைன் நகரைத் தாக்கிய நிலநடுக்கம், வடக்கே 200 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள அண்டாக்கியா மற்றும் அடானா நகரங்களில் வலுவாக உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com