

கவுதமலா சிட்டி,
மத்திய அமெரிக்க நடான கவுதமலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. மெக்ஸிகோ எல்லையையொட்டியுள்ள வடக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள பிராந்தியங்களிலும் உணரப்பட்டது.
கவுதமலா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சான் செபஸ்டியன் நகரத்தில் இருந்த பழமையான தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் காயம் அடைந்தார். பின் அதிர்வுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மக்கள் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு அதிபர் ஜிம்மி மோராலேஸ் டுவிட்டர் வாயிலாக வேண்டுகோள் முன்வைத்துள்ளார். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.