துபாயில் லாரி மீது மினிபஸ் மோதியதில் 7 இந்திய தொழிலாளர்கள் பலி

மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம்.
லாரி மீது மினிபஸ் மோதி விபத்து
Published on

அபுதாபி,

துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சாலை விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம், என துபாயில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

விபத்துக்கான காரணம்

துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத்துறை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம். கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ், சாலையின் நடுவில் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். இவர்களில் ஐந்து பேர் பலத்த காயங்களும், நான்கு பேர் ஓரளவுக்கு காயங்களும் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போக்குவரத்துக் குழுவினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, சம்பவ இடத்தைப் பாதுகாத்து, மீட்பு வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர்.

இரங்கல்

மேலும், இயல்பு நிலை போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக, பணிக்குழுவினர் சேதமடைந்த லாரியையும் பேருந்தையும் அகற்றினர், என்று அறிக்கையில் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனையை பார்வையிட்டு, காயமடைந்த இந்தியர்களை சந்தித்தனர். இந்த கடினமான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறோம், என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com