

காசா,
இஸ்ரேல் 1948-ம் ஆண்டு உருவானது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர், திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல், காசா எல்லையில் பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை மூண்டது. இஸ்ரேல் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில், 7 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்கு பாலஸ்தீன போராட்டக்காரர்களே காரணம் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.