

சியோல்,
தென் கொரியாவில் அதிகரித்து வரும் துாக்கமின்மையை போக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்நாட்டில் துாக்கப் போட்டி நடத்தப்பட்டது. தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் உள்ள யோயுடோ ஹாங்கங் பூங்காவில் துாங்குவதற்கான போட்டி மே 2 ல் நடந்தது.
இதன்படி, நன்றாக ஆழ்ந்து குட்டித் தூக்கம் போடும் நபர்களுக்கென போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வு 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. சியோல் மாநகராட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும், 'பவர் நேப்' என்ற இந்த போட்டியில் 170 பேர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள குறிப்பிடத்தக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றது.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு கண்களை வெறுமனே மூடுவது மட்டும் போதாது. இதில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயத் துடிப்பைக் கணக்கிடும் கருவிகள் வழங்கப்படும். அதன்மூலம், இதயத் துடிப்பு எந்த அளவிற்கு குறைந்து சீராக இருக்கிறது எனக் கணக்கிட்டு, குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூங்குபவருக்கு அதற்கான மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும் பல தொந்தரவுகளை தாண்டி ஆழ்ந்த துாக்கத்தை தொடர்கிறவர்களே போட்டியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்போட்டியில், 80 வயது முதியவர் ஒருவர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக, 37 வயதான அலுவலகப் பணிசெய்யும் நபர் ஒருவர் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
பல இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில் 80 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.