

வாஷிங்டன்,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகின் பிற எந்த நாட்டையும் விட அமெரிக்க வல்லரசு நாட்டைத்தான் பாடாய்ப்படுத்தி இருக்கிறது. அங்கு இதுவரை 5 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 8 லட்சத்து 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கியதும் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இப்போது உலகமெங்கும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி உள்ள சூழலில் அமெரிக்காவிலும் அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டத்தொடங்கி உள்ளது.
தற்போது அமெரிக்காவில் நியூஹேம்ப்ஷயர், ரோட் தீவு, மிச்சிகன், மின்னசோட்டா, வெர்மாண்ட் மாகாணங்களில் 2 வாரங்களில் சராசரி பாதிப்பு தலா 1 லட்சமாக உள்ளது. கொரோனா வேகமாக பரவுவதால் பல்கலைக்கழகங்கள் வார இறுதியில் மூடப்படுகின்றன.
அமெரிக்காவின் பிரபல தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி பாசி கூறுகையில், தற்போது தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும், ஒமைக்ரானுக்கென்று தனியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. 2 டோஸ் பைசர், மாடர்னா தடுப்பூசிகள் போதுமானவை. அவை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதில் இருந்து கணிசமான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தடுப்பூசிகள் இல்லை என்றால் இது உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய தருணம் என்பேன் என குறிப்பிட்டார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெப் ஜையண்ட்ஸ் கூறும்போது, ஓமைக்ரான் வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசி அமெரிக்காவிடம் உள்ளது. பொதுமுடக்கம் தேவையில்லை. 95 சதவீத அமெரிக்கர்களுக்கு தற்போது தடுப்பூசி உள்ளது. நமது குழந்தைகளை பள்ளிகளில் பாதுகாப்பது எப்படி, நமது தொழில் நிறுவனங்களை தொடர்ந்து நடத்துவது எப்படி என்பதை நாம் அறிவோம். நிச்சயமாக பொதுமுடக்கம் கிடையாது என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கி கூறும்போது, தற்போது அமெரிக்காவில் தினமும் சுமார் 86 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் 99 சதவீதத்தினர் டெல்டா வைரஸ் பாதிப்புக்குத்தான் ஆளாகின்றனர். இங்கே தடுப்பூசி போடப்படுகிறது. முககவசம் அணியுங்கள். தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். அவை ஒமைக்ரானுக்கு எதிராகவும் வேலை செய்யும் என தெரிவித்தார்.