‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் 8¾ கோடிப்பேரது தகவல்கள் திருடப்பட்டதாக நிறுவனர் ஒப்புதல்

அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமாக திகழும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் நிறுவனத்தால் திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உலக அரங்கை உலுக்கியது.
‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் 8¾ கோடிப்பேரது தகவல்கள் திருடப்பட்டதாக நிறுவனர் ஒப்புதல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்த தேர்தல்களின்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திருட்டு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதற்காக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதுடன், இனி இவ்வாறு நடைபெறாமல் தடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால் இப்போது 8 கோடிப்பேரது தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக ஜூக்கர்பெர்க் வெளியிட்டு உள்ள தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறுகையில், பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் முறையற்ற விதத்தில் பகிரப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

அப்போது நிருபர்கள், அப்படி என்றால் பேஸ்புக் நிறுவனத்தை வழிநடத்திச்செல்வதற்கு இன்னும் நீங்கள்தான் சிறந்த நபரா? என கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், இது இமாலய தவறு. இது எனது தவறுதான். இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ஆமாம், மனிதர்கள் தவறு செய்து விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து பாடமும் கற்றுக்கொள்கிறார்கள். மக்கள் எங்கள் மீது எதற்காக பொறுப்பு சுமத்த வேண்டும் என்றால், இந்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதற்குத்தான் என்று கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், 20 கோடிப்பேர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வந்தபோதும், அவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தகவல்கள்தான் திருடப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com