சுவீடனில் பயங்கரம் சரமாரி கத்திக்குத்தில் 8 பேர் படுகாயம் தாக்குதல் நடத்திய நபர் சுடப்பட்டார்

சுவீடனில் வெவ்வேறு இடங்களில் 8 பேரை சரமாரி கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை போலீஸ் படையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சுவீடனில் பயங்கரம் சரமாரி கத்திக்குத்தில் 8 பேர் படுகாயம் தாக்குதல் நடத்திய நபர் சுடப்பட்டார்
Published on

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டில் வெட் லாண்டா நகரில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில், ஒரே பகுதியில் 5 வெவ்வேறு இடங்களில் 20 வயது கடந்த ஒரு நபர் பலரையும் கத்தியால் குத்தி சாய்த்தார்.

கத்திக்குத்தில் வீழ்த்தப்பட்டவர்கள் அலறி துடித்தார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர். கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த நபரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கத்திக்குத்தில் வீழ்த்தப்பட்ட 8 பேர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொடூரமான வன்முறை நமது பாதுகாப்பு எவ்வளவு பலவீனமானது என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. சமூகத்தின் ஒருங்கிணைந்த சக்தியுடன் இந்த இழிவான செயல்களை நாம் எதிர்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி மலீனா கிரான் கூறுகையில், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தாக்குதல் நோக்கம் இருக்கிறதா என்பதை நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். இதில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என குறிப்பிட்டார்.

இந்த சம்பவம், அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

=================

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com