அப்பாவின் குரல் கேட்டதும் கருவிலேயே புன்னகைத்த குழந்தை... இணையத்தை நெகிழவைத்த வைரல் வீடியோ!

இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கனடாவில் அப்பாவின் குரலைக் கேட்டு கருவில் இருந்த பெண் குழந்தை புன்னகை செய்தது.
கருவில் புன்னகைத்த பெண் குழந்தை
Published on

ஒட்டாவா,

கனடா, ஒண்டாரியோ மாகாணத்தில் கருவில் இருந்த குழந்தை ஒன்று அப்பாவின் குரலைக் கேட்டு புன்னகைத்தது. இந்த வீடியா வைரலாகி இணையத்தை நெகிழ வைத்தது.

குழந்தையின் புன்னகை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் லியா ஒலிவேரா. இவர் கடந்த ஜூலை 25-ந்தேதி, தனது வழக்கமான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருடன் வந்த கணவர், லியாவின் வயிற்றை மென்மையாக முத்தமிட்டு, "காலை வணக்கம், இனிய சனிக்கிழமை" என்று கூறி குழந்தையிடம் பேசினார். தந்தையின் குரல் ஒலித்த அடுத்த கணமே, ஸ்கேன் திரையில் தெரிந்த அந்தப் பெண் குழந்தையின் முகம் பளிச்சென்று புன்னகைப்பதைப் போல மாறியது.

குடும்பத்தினர் நெகிழ்ச்சி

இந்த எதிர்பாராத தருணத்தை லியாவின் சகோதரி தனது மொபைல் போனில் துல்லியமாக வீடியோவாகப் பதிவு செய்தார். குழந்தையின் இந்த அழகான எதிர்வினையைக் கண்டு அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களும், குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து போயினர்.

இதுகுறித்து தாய் லியா ஒலிவேரா யாகூ செய்திகள் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்தக் காட்சியைக் கண்டதும் என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கண்களில் இருந்து மகிழ்ச்சி கண்ணீர் வழிந்தது. இது எங்கள் குடும்பத்தின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொக்கிஷமான நினைவாக மாறிவிட்டது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து

மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தின் பிந்தைய மாதங்களில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு வெளியில் கேட்கும் பழக்கப்பட்ட குரல்களை, குறிப்பாக பெற்றோரின் குரல்களைக் கேட்டு அடையாளம் காணும் திறன் இயற்கையாகவே இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com