

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள புர்லிங்டோன் என்கிற நகரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அலெக்ஸ்சாண்ட்ரா பிளாக் (வயது 22) என்கிற பெண் வேலைக்கு சேர்ந்தார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம் ஒன்று அந்த பெண்ணை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிங்கம் கூண்டில் இருந்து எப்படி வெளியே வந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.