ஆசையுடன் அணுகிய பெண் மேலதிகாரி; மறுத்ததற்காக பணி நீக்கம்: முன்னாள் கூகுள் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

கூகுள் நிறுவன முன்னாள் அதிகாரி ஒருவர், பெண் மேலதிகாரியின் பாலியல் விருப்பங்களை ஏற்க மறுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டேன் என வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஆசையுடன் அணுகிய பெண் மேலதிகாரி; மறுத்ததற்காக பணி நீக்கம்: முன்னாள் கூகுள் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

நியூயார்க்,

உலகம் முழுவதும் மக்களிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அவற்றில், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் தங்களது எண்ணங்கள், விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சமூக சேவையில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல வலைத்தள நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. எனினும், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் உலக நாடுகளில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தீவிர தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன.

அதனால், பொருளாதார சூழல், அதிகப்படியான செலவு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

இவற்றில் குறிப்பிடும்படியாக, பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனத்தில் இருந்து 13 ஆயிரத்துக்கும் கூடுதலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் இருந்து முறையே 10 ஆயிரம், 18 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். கூகுள் நிறுவனத்தில் இருந்தும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுபோன்று, 2022-ம் ஆண்டில் இதுவரை 1.35 லட்சம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், அந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் தனது பெண் மேலதிகாரி மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியுள்ள பாலியல் தொடர்புடைய குற்றச்சாட்டு 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்து உள்ளது. இதுபற்றி வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

ரையான் ஓலோஹான் என்ற அந்நபரின் குற்றச்சாட்டில், நிறுவனம் சார்ந்த விருந்து நிகழ்ச்சிக்காக மேன்ஹாட்டன் உணவு விடுதியில் ஒன்றாக இருந்தபோது, உயரதிகாரியான டிப்பானி மில்லர் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் அவரை பல இடங்களில் தொட்டுள்ளார்.

ஓலோஹானிடம், டிப்பானி கூறும்போது, உங்களுக்கு ஆசிய பெண்களை பிடிக்கும் என எனக்கு தெரியும். நானும் அவர்களில் ஒருவரே. ஆனால், தனது திருமண வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது, கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விளம்பர பிரிவில் இயக்குனராக டிப்பானி மில்லர் இருந்து வந்துள்ளார்.

இதில், உணவு, குளிர்பானம் மற்றும் உணவு விடுதி பிரிவின் மூத்த செயலதிகாரியாக ரையான் பணியில் இருந்துள்ளார். அவருக்கு மேலதிகாரியாக, கூகுள் நிறுவனத்தின் நுகர்வோர், அரசு மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கான விளம்பர பிரிவில், டிப்பானி பணியில் இருந்துள்ளார்.

கூகுள் நிறுவனம் சார்பில் நடந்த அந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ரையானின் உடல் மற்றும் பிற பகுதிகளை டிப்பானி தொட்டு பேசியுள்ளார்.

இதுபற்றி நிறுவனத்தின் மனிதவள துறையிடம் ரையான் புகாராக பின்னர் தெரிவித்து உள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையும் அவர் தனது வழக்கில் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகார் தலைகீழாக இருந்தது என்றால், ஒரு வேளை, ஒரு வெள்ளை நிற ஆடவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் புகாராக கூறினால், நிச்சயம் அந்த விசயம் பெரிதுப்படுத்தப்பட்டு இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இறுதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கூகுள் நிறுவன பணியில் இருந்து ரையான் நீக்கப்பட்டு இருக்கிறார்.

தனது மேலதிகாரிக்கு உள்ளடக்கிய முறையில் நடக்கவில்லை என்பதற்காக இந்த பணி நீக்கம் நடந்துள்ளது என அந்த வழக்கில் ரையான் தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்த உயரதிகாரி, இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.

முதல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, 2021-ம் ஆண்டு டிசம்பரில் கூகுள் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில், மது விருந்தின்போது, ரையான் ஓலோஹானை, சரியாக வேலை செய்யவில்லை என பணி சார்ந்த முறையில் கூறி டிப்பானி கடிந்து கொண்டுள்ளார். இதனால், சக பணியாளர்கள் டிப்பானியை அமைதிப்படுத்தி வேறு இடத்தில் அமர வைத்தனர்.

2022-ம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு சம்பவம் நடந்து உள்ளது. அப்போதும், நிறுவனம் சார்ந்த விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் குடித்து கொண்டிருக்கும்போது, ரையானை டிப்பானி வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஆசிய பெண்கள் மீது ரையானுக்கு அதிக விருப்பம் உள்ளது. அதுபற்றி தனக்கு தெரியும். ரையானின் மனைவி ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்பதுபோல் திரும்பவும் கூறி அவரிடம் டிப்பானி அப்போது, மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com