

மாஸ்கோ,
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.
இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.
அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் மாஸ்கோவில் நடந்த வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதின், மீண்டும் ஒரு தருணத்தில் திருமணம் செய்தாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது 66 வயதாகும் புதின் கடந்த 2013-ம் ஆண்டு அவரது மனைவியை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி புதினை பிரதமராக அவர் நியமித்தார்.
1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.
2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். இந்த நிலையில் மீண்டும் 4வது முறையாக அதிபராக புதின் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.