கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும் அந்த வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் கொரோனா வைரஸ் பயத்தால் சிகாகோ நகர விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் ஆதித்யா சிங் (வயது 36). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி சிகாகோவில் உள்ள ஓஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பிறகு கொரோனா வைரஸ் குறித்த பயத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்பாமல் விமான நிலையத்தில் தங்கினார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மறைவான இடங்களில் பதுங்கி இருந்து சக பயணிகளிடம் இருந்து உணவை பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விமான நிலையத்தில் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் ஆதித்யா சிங் நிற்பதை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் பார்த்தனர்.

பின்னர் அவர்கள் ஆதித்யா சிங்கிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம் ஆதித்யா சிங் தான் விமான நிலைய ஊழியர் எனக்கூறி அடையாள அட்டை ஒன்றை வழங்கினார். அந்த அடையாள அட்டை கடந்த அக்டோபர் மாதம் ஊழியர் ஒருவரிடம் இருந்து காணாமல் போனது என்பது தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தாக கூறி ஆதித்யா சிங்கை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com