

பெய்ஜிங்,
சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று, பழுதுகளைக் கண்டறியும் அதிநவீன ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்நாட்டின் யுனான் மாகாணத்திற்கு உட்பட்ட குன்மிங் பகுதியில் இந்த ரோபோ மூலம் மின் கம்பிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மின் கம்பியை சுற்றிப்பிடித்தபடி, அதன் மேல் பாம்பு போல் வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் வகையில் இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவில் அதிநவீன கேமராக்கள் மற்றும் பல்வேறு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் மின் கம்பிகளில் ஏற்பட்டுள்ள சேதம், தேய்மானம் மற்றும் கம்பிகள் அதிக வெப்பமடைவது போன்ற ஆபத்தான பிரச்சினைகளை இந்த ரோபோ துல்லியமாகக் கண்டறிந்து விடுகிறது.
மின் விநியோகத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோ, இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மின் வினியோகக் கம்பிகளை வெற்றிகரமாக ஆய்வு செய்து சாதனை படைத்துள்ளது. மனிதர்கள் நேரடியாக சென்று மேற்கொள்ளும் ஆய்வை விட, இந்த ரோபோ 3 மடங்கு கூடுதல் வேகத்தில் பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மின் கம்பிகளை ஆய்வு செய்ய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்த முடியாது. இதுபோன்ற இக்கட்டான சூழலில், இந்த ரோபோ மின் கம்பிகளின் மீது நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய பெரிதும் உதவுகிறது. மின் கம்பிகளில் உள்ள தடைகளையும் எளிதாகக் கடந்து செல்லும் வகையில் இதன் உடல் நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மனிதர்கள் சென்று ஆய்வு செய்ய முடியாத மிக அபாயகரமான இடங்களையும் எளிதாகக் கண்காணிக்க முடியும். மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து, மின்சார விநியோகம் தடைபடுவதை தவிர்க்க இந்த ரோபோ பெரும் பக்கபலமாக இருக்கும் என சீன மின் வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.