

பீஜிங்
சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில், மல்லாக்க கிடந்து போராடிய ஆமைக்கு, சக ஆமை உதவிய வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நான்ஜிங் ஹாங்ஷான் பாரஸ்ட் என்ற பெயரில் மிருகக்காட்சி சாலை ஒன்று உள்ளது. இதில், ஒட்டக சிவிங்கிகள், நரிகள், கொரில்லாக்கள் உள்பட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
அவற்றுடன், ஆமைகளும் உள்ளன. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட வகையான உயிரினங்களை கொண்ட இந்த மிருகக்காட்சி சாலையில், பகல் வேளையில் ஆமை ஒன்று தரையில் மல்லாக்க கிடந்திருந்தது. அதற்கு காயம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
அதனால், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் கால்களை மேல்நோக்கி ஆட்டியபடி, பரிதவித்தபடி இருந்தது. இதனை தூரத்தில் இருந்து பார்த்த சக ஆமை ஒன்று, மெல்ல அதனை நோக்கி வந்தது. போராடி கொண்டிருந்த ஆமைக்கு உதவ, சக ஆமை நீண்ட நேரம் முயன்றது.
பொதுவாக ஆமைகள் மெதுவாகவே செல்லும் பண்பை கொண்டது. அதுபோல், அந்த ஆமையை காப்பாற்ற சக ஆமையும் மெதுவாகவே சென்றது. ஆனாலும், அதனை மீட்பதற்கான தன்னுடைய முயற்சியை விடாமல் மேற்கொண்டது. முடிவில் அதில் வெற்றியும் பெற்றது.
அந்த ஆமையை அதன் கால்களில் நிற்கும் வகையில், தன்னுடைய பலம் முழுவதும் திரட்டி, தலையால் முட்டி, புரட்டி போட்டது. இந்த காட்சியை கண்ட பார்வையாளர்கள் கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி ஊழியர்கள் கூறும்போது, பொதுவாக விலங்குகள் இதுபோன்று அவைகளுக்குள் உதவி செய்து கொண்டு விடும். தேவைப்பட்டால் நாங்கள் சென்று காப்பாற்றுவோம் என்று தெரிவித்தனர். எனினும், மனிதர்களே சக மனிதர்களுக்கு உதவ யோசிக்கும் இந்த காலத்தில், நட்புக்கு எடுத்துக்காட்டாக, ஆமைக்கு சக ஆமை ஒன்று உதவிய இந்த வீடியோ வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.