இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - அடுத்து நடக்க போவது என்ன?

இலங்கை பிரதமர் பதவி விலகியுள்ள நிலையில், அங்கு அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - அடுத்து நடக்க போவது என்ன?
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த கூறி உள்ளார்.

அப்போது பிரதமரின் ஆதரவாளர்களும், பதவி விலக வேண்டாம் எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால், போராட்டக்காரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

இதனிடையே, இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நிட்டம்புவை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இலங்கையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், ஆளும் கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா போராட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்ததாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சியினரும், போராட்டக்காரர்களும், பிரதமர் மட்டும் பதவி விலகினால் போதாது என்றும், அதிபர் மற்றும் 225 எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், இலங்கை அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டு புதிய ஆட்சி அமைந்தாலும், முந்தைய ஆட்சியினர் செய்த ஊழல் குறித்து விசாரிக்கும் சூழல் உருவாகும் என்றும், இது பிரச்சனையை குறைக்கும் வழிமுறையாய் அமையாது என்றும் கூறப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் ராணுவ ஆட்சிமுறை அமல்படுத்தப்படலாம், என்றும், அவ்வாறு நிகழா பட்சத்தில், உள்நாட்டுப்போர் வெடிக்கலாம் என்றும் பத்திரிகைக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இலங்கைஅரசியலிலும், மக்கள் மத்தியிலும் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com