பாகிஸ்தானில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி

பாகிஸ்தானில் விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி
Published on

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏர்பஸ் ஏ-320 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் ரகீம் யார் கான் என்ற பகுதியருகே வந்தபொழுது, வானில் திடீரென அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு ஒன்று தோன்றியுள்ளது.

இதனை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி விமானி கூறும்பொழுது, சூரியஒளி இருக்கும்பொழுது அதனை விட மிக பிரகாசமுடன் அந்த பறக்கும் தட்டு காணப்பட்டது. பகற்பொழுதில், விமான பயணத்தில் இதுபோன்ற அதிக பிரகாசம் கொண்ட பொருள் ஒன்றை காண்பது மிக அரிது.

வானில் தென்பட்ட அந்த பொருள் கிரகம் இல்லை. ஆனால், பூமிக்கு அருகே காணப்படும் விண்வெளி நிலையம் அல்லது ஒரு செயற்கை கிரகம் ஆக கூட அது இருக்கலாம் என கூறியுள்ளார்.

அந்த விமானி வீடியோ எடுத்தது போக, ரகீம் யார் கான் பகுதியில் வசிக்க கூடிய குடியிருப்புவாசிகள் கூட பறக்கும் தட்டை கண்டுள்ளனர். அவர்களும் வீடியோ எடுத்துள்ளனர்.

பொதுவாக ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இதுபோன்ற பறக்கும் தட்டில் பயணம் செய்வார்கள் என பரவலாக கூறப்படுவதுண்டு. வேற்று கிரகவாசிகளை பற்றி அறிந்து கொள்வதற்காகவே பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இதற்கென தனியாக ஆர்வலர்களும் இருக்கின்றனர். எனினும், இதனை மறுப்பவர்களும் உள்ளனர்.

இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அது பறக்கும் தட்டா அல்லது வேறு எதுவும் இருக்கிறதா? என உறுதியாக கூற முடியாது.

அந்த பொருள் என்ன என்பது பற்றி உடனடியாக எதுவும் கூறிவிட முடியாது. உண்மையில், அந்த பொருள் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் வானில் ஏதோவொன்று தென்பட்டு உள்ளது. அதுபற்றி விதிமுறைகளின்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com