ஜிம்மில் தலைகீழாக சிக்கி வவ்வால் போல் தொங்கிய பெண்... கைகொடுத்த ஸ்மார்ட் வாட்சு

ஜிம்மில் உடற்பயிற்சியின்போது தலைகீழாக சிக்கி கொண்டு தொங்கிய பெண், ஸ்மார்ட் வாட்சு உதவியால் போலீசை அழைத்து அதில் இருந்து மீண்டுள்ளார்.
ஜிம்மில் தலைகீழாக சிக்கி வவ்வால் போல் தொங்கிய பெண்... கைகொடுத்த ஸ்மார்ட் வாட்சு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடகிழக்கே ஒஹியோ மாகாணத்தில் பெரீயா என்ற இடத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் (ஜிம்) ஒன்றிற்கு கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் சென்றுள்ளார். அவர், தலைகீழாக தொங்கியபடி உபகரணம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவரால் அதில் இருந்து கீழே இறங்கி வரமுடியவில்லை. அதிலேயே சிக்கி கொண்டார். அவருக்கு பக்கத்திலும் யாரும் இல்லை. எனினும், ஜிம்மில் இருந்த ஜேசன் என்பவரை அவர் அழைத்துள்ளார்.

ஆனால், அதிக சத்தத்துடன் பாட்டு இசைத்து கொண்டிருந்த சூழலில், கிறிஸ்டைனின் அழைப்பை ஒருவரும் கேட்க முடியவில்லை. இதனால், அதிக சிரமத்திற்கு ஆளானார்.

இந்த நிலையில், அவருக்கு கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சு கைகொடுத்தது. அவர், அதன் வழியே 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காவல் அதிகாரியை வரவழைத்து உள்ளார். இதன்பின்னர் அந்த அதிகாரி, ஜிம்மிற்கு வந்து கிறிஸ்டைனை மீட்டார்.

இதுபற்றி அந்த அதிகாரியிடம் கிறிஸ்டைன் கூறும்போது, மீட்புக்கான, சாதாரண எண்ணை என்னால் தேட முடியவில்லை. ஜிம்மில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்துள்ளார்.

நான் தலைகீழாக இதில் சிக்கி கொண்டேன். ஜிம்மில் இருந்த யாரையும் என்னால் அழைக்கவும் முடியவில்லை. தலைகீழாக இருந்த நான் மேலே வரவும் முடியவில்லை என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின்பு கிறிஸ்டைன், டிக்டாக்கில் தனது ரசிகர்களிடம் வெளியிட்ட செய்தியில், தலைகீழாக சிக்கிய சம்பவத்திற்கு பின்பு எனக்கு தலைவலி ஏற்பட்டது. லேசான மயக்கமும் காணப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com