'வாவ்' வாவ் பார்ட்டி! நீச்சல் குளத்தில் குதித்து கின்னஸ் சாதனை படைத்த 296 நாய்கள்!

”டூடுல் ரெஸ்க்யூ யுஎஸ்ஏ” என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீச்சல் குளத்தில் குதித்து கின்னஸ் சாதனை படைத்த 296 நாய்கள்!
கின்னஸ் சாதனை- நாய்கள் குளத்தில் குளித்து மகிழ்ந்த காட்சி
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல நீர் பூங்காவில், 296 டூடுல் ரக நாய்கள் ஒரே நேரத்தில் நீச்சல் குளத்தில் குதித்து புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தி வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

கின்னஸ் உலக சாதனை

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 'தேசிய நாய் வாரத்தை' முன்னிட்டு, கடந்த 27-ந்தேதி அன்று லாஸ் வேகாஸில் உள்ள புகழ்பெற்ற கவபங்கா கேன்யன் நீர் பூங்காவில் இந்த பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 'டூடுல் பலூசா 2026' என்ற பெயரில் இந்த நாய் பூல் பார்ட்டி நடத்தப்பட்டது. இதில் உலகின் பல பகுதிகளிலிருந்து 296 டூடுல் ரக நாய்கள் பங்கேற்றன. இந்த நாய் பூல் பார்ட்டி, "உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான நாய்கள் பங்கேற்ற பூல் பார்ட்டி" என்ற கின்னஸ் சாதனையை அதிகாரப்பூர்வமாக வென்றுள்ளது.

முந்தைய சாதனை முறியடிப்பு

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நேரில் ஆய்வு செய்ய கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ஒருவரும் வந்திருந்தார். அவர் முன்னிலையில் துல்லியமாக நாய்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதற்கு முன்பு, கடந்த மே மாதம் புளோரிடாவின் கோரல் கேபிள்ஸ் பகுதியில் 'செவி' என்ற அமைப்பால் நடத்தப்பட்ட பார்ட்டியில் 277 நாய்கள் பங்கேற்றதே உலக சாதனையாக இருந்தது. இதையடுத்து, ஒரே இடத்தில் 296 நாய்கள் திரண்டு அந்த பழைய சாதனையை நெவாடா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

குளத்தில் குதித்து கொண்டாடிய நாய் குட்டிகள்

இந்த விழாவின் முதன்மை ஆதரவாளராக 'வி லவ் டூடுல்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டது. பூங்காவில் உள்ள அலை குளம், குழந்தைகளுக்கான நீச்சல் பகுதி மற்றும் ஸ்பிளாஷ் பேட் ஆகிய இடங்களில் டூடுல் மற்றும் புடில் கலப்பின நாய்கள் தங்களின் உரிமையாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நீந்தி விளையாடின. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில், நாய்கள் அனைத்தும் சுதந்திரமாக அலை குளத்தில் நீந்தியும், புல்வெளிகளில் ஓடி விளையாடியும் தங்களது நாளைக் கொண்டாடின.

காப்பக நாய்களுக்காக திரட்டப்பட்ட நிதி

இந்த பிரம்மாண்டமான நிகழ்வு வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் நடத்தப்படவில்லை. இதற்கு பின்னால் ஒரு உன்னதமான நற்பணி நோக்கம் இருந்தது. ”டூடுல் ரெஸ்க்யூ யுஎஸ்ஏ” என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவின் மூலம் திரட்டப்பட்ட முழுத் தொகையும், கைவிடப்பட்ட டூடுல் நாய்களை மீட்பதற்கும், அவற்றுக்கான அவசர மருத்துவச் செலவுகள், உணவு, அழகு பராமரிப்பு, வளர்ப்பு இல்லங்கள் மற்றும் புதிய தத்தெடுப்பு விழிப்புணர்வு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டூடுல் ரெஸ்க்யூ அமைப்பின் நிர்வாகி டேனியல் டங்கர் கூறியிருப்பதாவது:-

"இந்த உலக சாதனை என்பது இங்கு வந்து கலந்துகொண்ட ஒவ்வொரு நாய் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமானது. நூற்றுக்கணக்கான டூடுல் குடும்பங்கள் ஒன்றாகக் கூடி இந்த வரலாற்று சாதனையை கொண்டாடிய அதே வேளையில், இன்னும் காப்பகங்களில் உதவிக்காக காத்திருக்கும் ஆதரவற்ற நாய்கள் பற்றிய விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியுள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான நாய் குட்டிகள் குதூகலத்துடன் தண்ணீரில் விளையாடிய இந்த கின்னஸ் சாதனை நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விலங்கு பிரியர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com