

அபுதாபி பட்டத்து இளவரசருக்கு விருது
துபாய் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவி தொடர்பான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கருத்தரங்கில் சிறப்பான வகையில் மனிதாபிமான பணிகளை வழங்கி வருவதற்காக அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு மனிதாபிமான உதவிகளுக்கான சர்வதேச விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காலத்தில் அமீரகத்தில் இருந்து மருத்து பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் அனுப்பி வைப்பதற்கு அபுதாபி பட்டத்து இளவரசர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
கண்காட்சியில், இந்த விருதை துபாய் சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சர்வதேச அறிவியல் ஆலோசனைக் குழுவின் இயக்குனர் ஜெர்கார்டு புட்மான் கிராமர் வழங்கினார். இதனை அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.