

அபுதாபி,
அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பில் 94 சதவீதம் பேர் இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் அபுதாபி என தெரிவித்து உள்ளனர். இது குறித்து சமூக மேம்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 4-வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு அபுதாபியில் வசிக்கும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 92 ஆயிரத்து 576 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதுவரை நடந்த கணக்கெடுப்புகள் மூலமாக மொத்தம் 3 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 14 முக்கிய தலைப்புகளில் கருத்துகள் கேட்டு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம், சொத்துகள், வேலை குறித்த தகவல்கள், சுகாதாரம், கல்வி, தனித்திறன்கள், தனிப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு, சமூக உறவுகள், குடிமக்கள் பங்கேற்பு மற்றும் நிர்வாகம், சுற்றுச்சூழலின் தரம், சமூகம் மற்றும் கலாசார ஒருங்கிணைப்பு, சமூக சேவை, வாழ்க்கை தரம், மகிழ்ச்சிப்படுத்தும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நல்வாழ்வு ஆகியவைகளின் கீழ் கருத்துகள் கேட்கப்பட்டது.
சமூக உறவுகளை பொறுத்தவரையில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 75.4 சதவீதம் பேர் தேவைப்படும்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களை நம்பி இருக்கலாம் என கூறியுள்ளனர். 73 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த நேரத்தால் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தெரிவித்தனர். வருமானத்தை பொறுத்தவரையில் 34.3 சதவீதம் பேர் குடும்ப வருமானத்தில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். அதேபோல் தனிநபர் வருமானத்தில் 64.7 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல் தாங்கள் வசிக்கும் வீடுகள் வசதியாகவும், திருப்திகரமாகவும் உள்ளதாக 70.6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் வாழ்க்கை தரத்தில் திருப்தி என்ற மகிழ்ச்சியின் அளவுகோளில் 10-க்கு 7.69 புள்ளிகள் என்ற விகிதத்தில் உள்ளது. அதேபோல நகரின் பாதுகாப்பை பொறுத்தவரையில் இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாக பங்கேற்றவர்களில் 93.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.