

பீஜிங்,
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகர் நாஞ்சிங் நகரில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் சாங்சுன் மற்றும் ஷென்சன் நகரங்களை இணைக்கும் இருவழி விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்த முயற்சித்தார். ஆனால் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்புற சாலையில் பஸ் பாய்ந்தது.
அதன் பின்னரும் பஸ் நிற்காமல் வேகமாக ஓடியது. அதனை தொடர்ந்து எதிர்திசையில் வந்த ஒரு லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சும், லாரியும் சாலையில் கவிழ்ந்தன.
இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் மற்றும் அவருடன் பயணம் செய்த 2 பேரும், பஸ்சில் இருந்த 33 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் பஸ் பயணிகள் 36 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
நீண்ட நேரத்துக்கு பிறகு விபத்து நடந்த இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவை பொறுத்தவரையில் இதுபோன்ற கோர விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் அந்நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 58 ஆயிரம் பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது மற்றும் முறையாக செயல்படுத்தாமல் இருப்பதே 90 சதவீத விபத்துகளுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.