நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு
Published on

துபாய்,

நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.

ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து துபாய் போலீஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு ஸ்ரீதேவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் (25-ந் தேதி) மதியம் ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் பரிசோதனை தொடர்பான தடய அறிவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடல் அன்றைய தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் மாலை 4.20 மணி அளவில் ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை துபாய் போலீசார் வெளியிட்டனர்.

நடிகை ஸ்ரீதேவி குளியல் அறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மூழ்கி சுவாசம் தடைபட்டு உயிர் இழந்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அவர் சிறிது மது அருந்தி இருந்ததற்கான சான்றுகள் அவரது ரத்த மாதிரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இந்த மரணம் தண்ணீரில் மூழ்கியதால் நடந்த விபத்து என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு வேறு காரணம் தெரியவந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இதன் காரணமாக பர்துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீதேவி உடலை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக நீதிமன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீதேவியின் உடல் பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அறிக்கைகளை போலீசார் தயார் செய்து துபாய் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த போலீசார் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளில் அரசு வழக்கறிஞருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால், ஸ்ரீதேவி இறக்கும் நேரத்தில் உடன் இருந்த அவரது கணவர் போனிகபூரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. பிறகு அவருடன் இருந்த உறவினர்களிடமும் முழுமையாக விசாரணை செய்யப்பட்டது.

இந்த விசாரணையை பர்துபாய் போலீஸ் நிலையத்தில் அரசு வழக்கறிஞர் முன்னிலையில் போலீசார் நடத்தினர்.

இதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று முன்தினமும் ஸ்ரீதேவி உடல் எம்பாமிங் (பதப்படுத்தும் பணி) செய்யப்படவில்லை. இதனால் அவரது உடலை ஒப்படைப்பதில் நேற்று முன்தினமும் தடை ஏற்பட்டது.

3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் இருந்து அவருடைய உடலை பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டனர். காலை முதல் மதியம் வரை வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.

நேற்று முன்தினம் இரவு நடந்த விசாரணையின் முழு அறிக்கை மீண்டும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரசு வழக்கறிஞர் தலைமையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில் நீதிமன்ற ஆய்வுகளில் பல்வேறு சந்தேகங்களை போலீசாரிடம் அரசு வழக்கறிஞர் எழுப்பினார். அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு தலையின் பின்புறம் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா சென்ற அவரது கணவர் போனிகபூர் திடீரென்று துபாய் திரும்பி வந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவியின் உடலை மீண்டும் தடய அறிவியல் பிரிவில் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடலில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வானது சாதாரணமாக அரசு நடைமுறைக்காக செய்யப்படுவது என நீதிமன்ற அதிகாரிகளின் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே போலீசார் மீண்டும் தாக்கல் செய்த அறிக்கையில் துபாய் அரசு வழக்கறிஞர் திருப்தி அடைந்தார். வழக்கும் முடித்துவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி உடலை பிரேத பரிசோதனை மையத்தில் இருந்து கொண்டு செல்ல அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் 12.45 மணியளவில் அனைத்து கடிதங்களையும், ஆவணங்களையும் போலீசார் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனால் 3 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது.

இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் உடனடியாக துணைத்தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஸ்ரீதேவியின் உடலை பெறுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து போனிகபூரின் மகன் நடிகர் அர்ஜூன் கபூர் துபாய் வந்தார். ஸ்ரீதேவியின் உடலை வாங்க பிரேத பரிசோதனை மையத்திற்கு போனிகபூரின் நெருங்கிய உறவினரான சவுரப் மல்கோத்ரா வந்திருந்தார்.

அனைத்து ஆவணங்களும், அனுமதி கடிதங்களும் சரியாக இருந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்வதற்காக, அல் முகைஸ்னாவில் உள்ள எம்பாமிங் சென்டருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் ஒரு மணி நேரத்தில் எம்பாமிங் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்த மரப்பெட்டியில் ஸ்ரீதேவி உடல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடை உடல் வைக்கப்பட்ட பெட்டி, ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவி உடல் ஏற்றப்பட்டது. பிறகு மாலை 5.30 மணியளவில் (இந்திய நேரம் இரவு 7 மணி) விமானத்தின் மூலம் மும்பைக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் போனிகபூர் உள்ளிட்ட உறவினர்கள் பயணம் செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com