

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக அதன் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. கடந்த 1993-ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கிய ஜென்சன் ஹுவாங், 33 ஆண்டுகளாக அதன் தலைமை பொறுப்பில் இருந்து வந்தார்.
63 வயதான ஜென்சன் ஹுவாங், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. குறிப்பாக, சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது.மேலும், தனக்குக் கீழ் பணியாற்றும் என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவலுடனும் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜென்சன் ஹுவாங் தனது மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டு நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜென்சன் ஹுவாங்கின் எதிர்காலம் குறித்து என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், அவர் தனது தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து உடனடியாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியா நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவராக (CFO) இருக்கும் கோலெட் கிரெஸ், இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் இந்தப் பொறுப்பில் நீடிப்பார். அதே நேரத்தில் நிதிப் பிரிவு தலைவர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார். நிரந்தர தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்வதற்கான பணிகளை நிறுவனத்தின் நிர்வாகக் குழு தொடங்கியுள்ளது. நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தகுதியான நபர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்சன் ஹுவாங்கின் திடீர் ராஜினாமா செய்தி வெளியானதை தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 12 சதவீதம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.33 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய அதன் இணை நிறுவனரின் விலகல், உலக தொழில்நுட்பத் துறையிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை என்விடியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை.