ஆப்கானிஸ்தான் அதிபர் தலீபான் அமைப்பினரிடம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் 16 வருட போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார். #AfghanistanPresident
ஆப்கானிஸ்தான் அதிபர் தலீபான் அமைப்பினரிடம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் 4வது முறையாக முத்தரப்பு கூட்டத்தினை நடத்தியது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடந்த இந்த சந்திப்பில், இந்திய தரப்பில் தூதரக இணை செயலர் தீபக் மிட்டல், ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவு துறை மந்திரி ஹெக்மத் கர்சாய் மற்றும் அமெரிக்காவின் அலைஸ் வெல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழு கலந்து கொண்டது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, அமைதி, ஜனநாயகம், பன்முக தன்மை மற்றும் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டு வளமிக்க நாடாவதற்கு தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது என 3 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தளத்தினை அமைக்கும் நோக்குடன் நடந்த இந்த முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, தலீபான் அமைப்பிற்கு சட்டப்பூர்வ அரசியல் குழு என அங்கீகாரம் வழங்கப்படும் என கூறியுள்ளார். அதன்வழியே 16 வருட போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையை நடத்த இயலும்.

போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றை அதிபர் முன்மொழிந்துள்ளார். தலீபானுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com